|
1) நபி (ஸல்) அவர்களின் பள்ளியில் தொழுவதற்காக எந்த
நேரம் வேண்டுமானாலும் பயணம் மேற்கொள்வதற்கு மார்க்கம் அனுமதிக்கிறது.
'எனது இந்தப் பள்ளியில் தொழுவது மஸ்ஜிதுல் ஹராமைத்
தவிரவுள்ள அனைத்து மஸ்ஜிதுகளிலும் தொழுவதைவிட ஆயிரம் மடங்கு சிறந்தது
என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் (புகாரீ, முஸ்லிம்).
ஆனால் நபி (ஸல்) அவர்களின் கப்ரையோ
மற்றவர்களின் கப்ருகளையோ தரிசிப்பதற்காக பயணம் மேற்கொள்ளக் கூடாது.
ஏனெனில் மூன்று பள்ளிகளைத் தவிர வேறு எங்கும் புனிதப் பயணம்
மேற்கொள்ளக்கூடாது. அவை: மஸ்ஜிதுல் ஹராம், எனது இந்தப் பள்ளி,
மஸ்ஜிதுல் அக்ஸா' என்பது நபிமொழி (புகாரீ,
முஸ்லிம்).
2) மஸ்ஜிதுந்நபவீயில் தொழுவதற்காகப்
பயணம் மேற்கொள்வதற்கும் ஹஜ்ஜிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
இந்தத் தரிசனம் ஹஜ்ஜுக்கு முன்போ பின்போ நிகழ வேண்டும் என்பது ஹஜ்ஜின்
சுன்னத்களிலோ அதன் முழுமைப்படுத்தலிலோ இல்லை. இந்தத் தரிசனம் ஹஜ்ஜுக்கு
முன்போ பின்போ நிகழ வேண்டும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரும்
செய்திகள் யாவும் ஆதாரமற்றவை. இமாம் இப்னு ஹஜர் (ரஹ்), அல்உகைலீ (ரஹ்),
இப்னு தைமிய்யா (ரஹ்) ஆகியோர் இந்தக் கருத்தைத் தாங்கிய செய்திகளைக்
குறிப்பிட்டுவிட்டு முறையே அனைத்தும் பலவீனமானவை,
ஆதாரப்பூர்வமானவையல்ல, இட்டுக்கட்டப்பட்டவை எனக்
கூறியுள்ளனர்.
3) மஸ்ஜிதுந் நபவீயை அடைந்ததும் மற்ற
மஸ்ஜிதுகளில் நுழையும்போது நடந்துக் கொள்வதைப் போல வலது காலை
முன்வைத்து, 'பிஸ்மில்லாஹி வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹி
அல்லாஹும்மஃப்தஹ் லீ அப்வாப ரஹ்மத்திக, அவூது பில்லாஹில் அளீம் வ பி
வஜ்ஹிஹில் கரீம் வ சுல்தானிஹில் கதீம் மினஷ்ஷைத்தானிர்ரஜீம்' என்று
ஓதிக்கொண்டு நுழைய வேண்டும்.
4) பிறகு அங்கு தஹிய்யத்துல்
மஸ்ஜித் இரு ரக்அத்கள் தொழ வேண்டும்.
5) பிறகு நபி (ஸல்),
மற்றும் அன்னாரின் தோழர்களான அபூ பக்ர் (ரழி), உமர் (ரழி) ஆகியோரின்
கப்ருகளுக்கு அருகே சென்று, அஸ்ஸலாமு அலைக்க யாரஸூலல்லாஹ் வ
ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு, அஸ்ஸலாமு அலைக்க யா அபா பக்ர்,
அஸ்ஸலாமு அலைக்க யா உமர், என்று கூறி விட்டு அங்கு தாமதிக்காமல்
சென்று விட வேண்டும்.
6) மஸ்ஜிது குபாவைத் தரிசித்து அங்கு இரு
ரக்அத்கள் தொழுவது விரும்பத் தக்கதாகும். ஏனெனில், யார் தமது வீட்டில்
சுத்தமாகி - உழூ செய்து பிறகு மஸ்ஜிது குபா வந்து இரு ரக்அத்கள்
தொழுகின்றாரோ அவருக்கு உம்ராவின் கூலி கிடைக்கும் என்பது நபிமொழி
(அஹ்மத், நஸயீ).
7) பொது மைய வாடியான பகீஃ, உஹதில்
ஷஹீதானவர்களின் கப்ருகள் ஆகியவற்றை ஸியாரத் செய்வதும் விரும்பத்தக்கதே.
ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அக்கப்ருகளை ஸியாரத் செய்துள்ளதுடன்
அவர்களுக்காக துஆவும் செய்துள்ளார்கள். இது பற்றி பொதுவாக நபி (ஸல்)
அவர்கள் கூறியிருப்பதாவது: கப்ருகளைத் தரிசிப்பதை விட்டும் உங்களை நான்
தடுத்திருந்தேன். அறிந்துக்கொள்க! இனி அவற்றைத் தரிசியுங்கள்!
(முஸ்லிம்). மேலும் நபி (ஸல்) அவர்கள், கப்ருகளைக் கண்டால், 'அஸ்ஸலாமு
அலைக்கும் அஹ்லத்தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிமீன், வ இன்னா இன்ஷா
அல்லாஹு பிகும் லாஹிகூன், நஸ்அலுல்லாஹ லனா வலகுமுல் ஆஃபியா'|என்று கூற
வேண்டுமென தமது தோழருக்குக் கூறியுள்ளார்கள்
(முஸ்லிம்). |